Thursday, February 21, 2008

நடமாடும் தெய்வங்கள் !!!

ஒன்பது ரூபாய் நோட்டு - ஒவ்வொருவரும் அவசியம் பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம், அதை வெறும் ஒரு படமாக மட்டும் பார்ப்பவர்கள் இந்த பதிவை தொடர்ந்து படிக்க வேண்டாம். பாசம், பிணைப்பு, குடும்பம்னு emotional bundles ஆக இருப்பவர்கள் மட்டும் இதை மேலே படிக்கலாம். ஒரு மாதவன் படையாச்சியின் கதை. நம் ஒவ்வொருவருக்குள்ளும் பல கேள்விகளை எழுப்பும் கதை இது. நம் ஒவ்வொருவரையும் இந்த உலகிற்கு அறிமுகப்படுத்திய ஒரு பெற்றோரின் கண்ணீர் கதை . நம் வாழ்க்கையில் எல்லோருமே ஒரு சந்தர்ப்பத்திலாவது கண்டிப்பாக நம் பெற்றோரின் கண்டிப்பை கடந்து வந்தே இருப்போம். அந்த நேரத்தில் வெளியில் சொல்ல முடியவில்லை என்றாலும் கண்டிப்பாக மனசுக்குள்ள அவங்களை சின்னதா வெறுத்திருப்போம் (அந்த நேரத்துக்கு/அவர்களின் கடுமையான வார்த்தைக்கு). அப்படி மனசார ஒரு நொடி கூட நல்ல ஒரு தாய் தந்தையை நாம வெறுத்திருக்க கூடாது.

சுய கவுரவத்தோடு வாழும் ஒவ்வொரு பெற்றோரும் தெய்வங்கள் தான். எத்தனை தியாகங்கள், எத்தனை துயரங்களை நமக்காக கடந்து வந்திருப்பாங்க. நம் படிப்பு, நம் வளர்ப்பு என்று எத்தனையோ விஷயங்களுக்கு எத்தனையோ கஷ்டங்களை அனுபவிச்சு இருப்பாங்க. எத்தனை பேர் வெளிநாட்டில் குடும்பத்தை பிரிந்து தனியாக கஷ்டப்பட்டு உழைச்சிருப்பாங்க, எத்தனை பேர் கூலி வேலை செய்து பிள்ளைங்களை காப்பாத்தி இருப்பாங்க, எத்தனை பேர் எத்தனையோ அவமானங்களை பொருட்படுத்தாமல் அருவெறுக்கத்தக்க வேலைகளை செய்திருப்பார்கள். ஒவ்வொரு கடைநிலை தொழில் செய்து குடும்பத்தை காப்பவனும் தெய்வம் தான். கணவனை இழந்த எத்தனை பெண்கள் தன் குழந்தைகளை மானத்தோடு காப்பாத்த எத்தனை கஷ்டப்பட்டிருப்பார்கள். இந்த கேடுகெட்ட சமுதாயத்தில் இதெல்லாம் அவங்க கடமைன்னு நெனச்சாலும் கடமையை தூக்கி எறிஞ்சிட்டு சுயநலமா வாழுற எத்தனையோ மிருகங்கள் இருக்காங்க. அப்படி சுயநலமா இல்லாம தன் குடும்பத்துக்காக உழைக்கிற எல்லாரும் தெய்வங்கள் தான்.

மறைந்த நடிகர் திரு. ஜெமினி கணேசனின் மகள் கமலா செல்வராஜ் அவர்களின் பேட்டி ஒன்றை அண்மையில் பார்த்தேன். தன் அப்பா மீது அவ்வளவு மரியாதை, அவ்வளவு அன்பு. அவருக்கு அத்தனை குடும்பங்கள் இருந்தும் அவர் மேல் வெறுப்பு கொஞ்சமும் இல்லாமல் அவரை கடைசி வரை அவ்வளவு அன்பாக பார்த்துக் கொண்ட அவரது மனைவியும் குழந்தைகளும் எவ்வளவு நல்ல மனசு படைச்சவங்களா இருக்கணும் - ரொம்ப நெகிழ்ந்து போனேன். நாம் பெற்றோரின் விருப்பம் இல்லாமல் ஒரு காரியம் செய்யும் போது அவர்கள் ஏதோ ஒரு பயத்தில் நம்ம குழந்தை வழி மாறி போய் கஷ்டத்தில் சிக்கிவிடக்கூடாதேனு நெனச்சு நம்மை கடுமையான வார்த்தைகளால் பேசி இருப்பாங்க. அப்படி வார்த்தைகளால் காயப்படுத்தினாலும் அவங்க நம்ம பெத்தவங்க-ங்கற நினைப்போடு எந்த ஒரு வருத்தமும் இல்லாமல் அவங்க மேல பாசத்தை காட்டணும். நம்மோட நல்லதை மட்டும் தான் அவங்க நெனைப்பாங்கனு நம்பினா போதும், நமக்கு அவங்க மேல வருத்தமே வராது.

நம் காலத்தை விட அவங்க காலம் சின்னது, அந்த சின்ன காலத்தை அவங்க சந்தோஷமா இருக்க நம்மால் என்னவெல்லாம் பண்ண முடியுமோ அத்தனையும் பண்ணனும். அதே மாதிரி பெத்தவங்களும் பிள்ளைங்க அறிஞ்சும் அறியாமலும் செய்யுற தப்பை மன்னிச்சு ஏத்துக்கணும். உங்க பிள்ளைங்க தானே... வாழ்க்கையே ரொம்ப சின்னது, அதுல கோபதாபங்களுக்கு இடம் கொடுத்து அன்பையும், பாசத்தையும் அழிச்சிட வேண்டாம். பெத்தவங்களை என்னைக்கும் சுமையா நினைக்காம அவங்களை சந்தோஷமா காப்பாத்தணும். யாருக்கு எப்போ முடிவு எப்படி முடிவுனு யாருக்கும் தெரியாது அப்படி இருக்கும் போது எதுக்கு இத்தனை ஆட்டம்? ஒவ்வொரு நாளும் சாமி கும்பிட்டு நெத்தியில திருநீறு இட்டு கொள்ளும் போதும் கடைசியில நாமளும் இப்படி சாம்பலா தான் போக போறோம் னு ஒரு நிமிஷம் நெனச்சா நம்ம தலைகனம் எல்லாம் காணாம போய்டும். உயிரோடு இருக்கும் போது ஒருத்தரோட அருமை தெரியாது. அவங்க போன பின்னாடி தான் அழுது புலம்பும் நம்ம மனசு. இந்தப் படம் அதை அழகாக உணர்த்துகிறது. நீங்க இன்னும் பார்க்கலேன்னா கண்டிப்பா பாருங்க, நீங்களும் ரசிப்பீங்க.
Number of online users in last 3 minutes
westgate resorts


Total User Hits
Free Hit Counter