Tuesday, November 27, 2007

சின்னஞ்சிறு வயதில் !!

நல்ல தூக்கம்...அப்பா பேசும் சத்தம் (பாவம்..அப்பா மெதுவா பேசினாலும் 4 வீட்டுக்கு கேக்கும் - அப்படி ஒரு குரல்) கேட்டு தூக்கம் லேசா கலைய மணி 6 என்று உணர்ந்து அடுத்த நிமிஷம் ஆஹா இன்னைக்கு சண்டே என்று ஞாபகம் வர பக்கத்தில் அக்காவும் தூங்கி கொண்டு இருப்பதை பார்த்து ஹப்பா இன்னும் நமக்கு கொஞ்சம் கிரேஸ் டைம் இருக்கு-னு நம்பி கண்ணை மூட அம்மா வந்து இன்னும் என்ன தூக்கம்-னு எழுப்பி விட்ருவாங்க :-((. சரி நமக்கு அப்போதைய ஆறுதல் 2KM தூரம் இன்னைக்கு ஸ்கூல்க்கு நடக்க வேண்டியதில்லை பிளஸ் இன்னைக்கு சுதந்திரமா டிவி பார்க்கலாம்னு ஒரு தெம்பு வரும். எழுந்து தலை குளியல் போது அம்மாவிடம் 4 அடியோடு அன்றைய நாளை ஆரம்பிச்சு 7 மணிக்கு TV முன்னாடி வந்து ஆஜர் ஆவோம். அங்கே கிச்சன்ல டிபன் நல்லா சூடா இட்லி வடகறி/சாம்பாரோட வாசனையா இருக்கும் - அதுவே சண்டே ஃபீலிங்கை வரவழைக்கும்.

தூர்தர்ஷன்ல அப்போ முதல்ல VIBGYOR கலர்ஸ்ல நிறைய காலம்மா (column) வரும்- வீட்டுல அப்போ black & white TV தான் - நிறைய சாம்பல் நிற கோடுகளா தெரியும். மெதுவா அதுல எப்போ அந்த DD logo வரும்-னு அதையே உற்று பார்த்துக்கிட்டு இருப்போம் - அதை நாங்க செல்லமா "நாய் வாலு"-னு சொல்லுவோம் - அது அப்படியே ஒரு மியூசிக்கோட சுருண்டு வந்து நிக்கும். அம்மா தட்டுல டிபன் கொண்டு வந்து கொடுப்பாங்க .அப்போ ஆரம்பிச்சு மாலை ஸ்போர்ட்ஸ் ப்ரோக்ராம் வர்ற வரை TV ஆப் பண்ணாம பார்போம்- ஸ்போர்ட்ஸ் ப்ரோக்ராமுக்கு சண்டை போட வீட்டுல பையன் இல்ல, அதுனால அப்போ தான் TV க்கு ரெஸ்ட். TV அடுப்பு கணக்கா கொதிக்கும். மாலை போடும் தமிழ் படம் பார்க்கணும்னா ஒரு மணி நேரத்துக்கு TV க்கு ரெஸ்ட் வேணும் இல்லனா TV கோடு கோடா ஓட ஆரம்பிச்சிடும் (horizontal lines moving upwards). அந்த மாதிரி வரும் போதெல்லாம் TV தலைல ஒண்ணு போடுவாங்க - சரி ஆகும். இல்லன்னா நானும் அப்பாவும் மாடிக்கு பொய் TV ஆண்டெனாவை திருப்புவோம், அம்மா TV பார்த்து பார்த்து அப்டேட் கொடுப்பாங்க.

அப்போலாம் DD ல ஒரு ரீல்-ல சமூக அக்கறையுள்ள குறும்படங்கள் வரும். உதாரணத்துக்கு ஒரு வதந்தி எப்படி பரவுதுனு, அப்புறம் சுற்றுபுறமாசு பற்றி ஒன்னு - அது எனக்கு ரொம்ப பிடிக்கும். சில நேரங்களில்...சாரி பல நேரங்களில் "தடங்கலுக்கு வருந்துகிறோம்"-னு ஒரு அம்மா சப்பாத்தி கட்டை கொண்டு கணவரை அடிக்கிற மாதரி சிலைடு வரும்- சில நாள்ல சிலைடு வைக்கிறவரு விரல் கூட தெரியும். ரொம்ப நேரத்துக்கு காத்திருப்போம், சில நேரத்தில் அதை நாங்க எல்லாரும் சேர்ந்து ஒரு எழுத்து விட்டு விட்டு சொல்லிகிட்டே இருப்போம். அந்த சிலைடு போயிடும்னு நம்புவோம். எப்படி சொல்லுவோம் என்றால் "டங்களுக்கு வருந்துகிறோம், அங்களுக்கு வருந்துகிறோம், களுக்கு வருந்துகிறோம்" இப்படி :-)))

அந்த "காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு" என் தங்கையோட favorite- அவ அப்போ ரொம்ப சின்ன பொண்ணு, ஆனால் அப்படியே அந்த அறிவிப்பை வேற மாதிரி கிண்டல் பண்ணி இமிடேட் பண்ணுவா. அப்போல்லாம் நாங்க பயங்கர மாக்கானுங்களா இருந்திருக்கோம். உதாரணத்துக்கு நம்ம தமிழ் செய்தி வாசிப்பவரையும் டெல்லி இங்கிலீஷ் நியுஸ் வாசிக்கிறவங்களை பற்றி கம்பேர் பண்ணுவோம். நம்ம ஆளுங்க பார்த்தே படிக்கிறாங்க, டெல்லி ஆளுங்க எப்படி பார்க்காம மனப்பாடம் பண்ணி படிக்கிறாங்க-னு திட்டுவோம். அப்புறம் ரொம்ப நாள் கழிச்சு தான் "tele promptor" பத்தி எல்லாம் தெரிய வந்துச்சு :-((

அப்போ வர்ற நிகழ்ச்சி எல்லாம் வித்தியாசமா இருக்கும், இன்னும் அப்படியே ஞாபகத்துல இருக்கு. நன்னனோட "காண்போம் கற்போம்", வயலும் வாழ்வும், மென் அண்ட் மேட்டேர்ஸ், மனைமாட்சி, கண்மணிப்பூங்கா, தேன் துளி, Secrets of the sea, Space city sigma, Fairy Tales, Potli baba ki, எதிரொலி - யு.ம் கண்ணன் தான் நிறைய வருவார். இரவு "ஓவர் டு ரீஜினல் சர்வீஸ்" னு போடுற வரை சண்டே-ல TV பார்ப்போம். அது போட்டதும் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும் மறுநாள் ஸ்கூல் போகணுமே-னு. :-(

அப்போல்லாம் ஞாயிற்று கிழமை மத்தியானம் 1.30 மணிக்கு hearing impaired news போடுவாங்க. அதை பார்த்து செய்கை பாஷைல கொஞ்ச நேரத்துக்கு பேசிக்குவோம். அப்புறம் Regional Film வரும் சப்-டைட்டில் பார்த்து பார்த்து கதைய புரிஞ்சிக்குவோம். என்னைக்காவது ஒரு தமிழ் படம் வரும்- அதை காலையிலே செய்திதாள்ல பார்த்துடோம்னா பக்கத்து வீட்டுக்கெல்லாம் சொல்லி ஒரே பரபரப்பை உருவாக்குவோம். அன்னைக்கு வேகமா சாப்பிட்டு அந்த படத்தை மிஸ் பண்ணாம பார்க்க உட்கார்ந்துடுவோம். சண்டேல இன்னொரு கொடுமை என்னன்னா எங்க வீட்டுல இஷ்டத்துக்கு non veg இருக்கும், அப்பா அதை சூடா சாப்பிட சொல்லுவாங்க, சூடா காரமா சாப்பிடுவோம் - கண்ணுல மூக்குலலாம் தண்ணி கொட்டும், ஆறிட கூடாதுன்னு பேனையும் அப்பா ஆஃப் பண்ணிடுவாங்க. அந்த காரத்துக்கு குடிக்க வெந்நீர் வேற - என்ன கொடுமை சார் இது :-(((

அப்போல்லாம் திங்கள் கிழமை சித்ரமாலா வரும். அந்த ஒரு தமிழ் பாட்டுக்கு தவம் கெடப்போம், அப்புறம் செவ்வாய் நாடகம்- அது அப்போ ரொம்ப பேமஸ். ஒரே sofa தான் எல்லா நாடகத்திலும் வரும். அதுக்கு வெல்வெட் எஃபெக்ட் கொடுக்குறதுக்காக shade பண்ணி இருப்பாங்க. பயங்கர பக்கித்தனமா இருக்கும், ஆளுங்க நடந்தா டும் டும்னு சத்தம் வேற வரும். அதுல வர நடிகரெல்லாம் பயங்கர artificial லா நடிப்பாங்க . அப்போ famous ஹீரோ ஹீரோயீன் யாருன்னா ராஜேந்திரன், ஸ்ரீலேகா, சுமங்கலி, கண்ணன் இவுங்கெல்லாம் தான். :-))) அப்புறம் புதன் சித்ரஹார் வரும், வியாழன் ஒண்ணும் பெருசா இருக்காது, வெள்ளி ஒலியும் ஒளியும், சனி ஹிந்தி படம் அப்புறம் முன்னோட்டம், ஞாயிறு தமிழ் படம்.

அப்புறம் பல வருஷத்துக்கு அப்புறம் நிறைய ஹிந்தி சீரியல் தமிழ்ல டப் பண்ணி வந்துச்சு, அதுல முதல் இடம் நம்ம ஜுனூன். ஜுனூன் தமிழ்னே ஒன்னு இருக்கு :-))) தலை கீழா பேசினா அதான் ஜுனூன் தமிழ். உதாரணத்துக்கு "நான் நல்லா இருக்கேன்" -ங்கரத ஜுனூன் தமிழ் ல "இருக்கேன் நான் நல்லா.." னு சொல்லணும். :-)) அதுல இன்னும் சில சீரியல் என்னன்னா...ஸ்வாபிமான், கநூன், ஜமானா பதல் கையா, து து மெய்ன் மெய்ன், நுக்கடு, நையா நுக்கடு. நுக்கடு எனக்கு பிடிக்கும்ங்க :-). இப்படி நிறைய அந்த நாள் ஞாபகம் ...ஹ்ம்ம் ..அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சுனு சொல்றது ரொம்ப சரி. கேபிள் TV எல்லாம் வந்து எப்பவும் நிகழ்ச்சி இருப்பதால் தான் நமக்கு அந்த க்ரேஸ் போய் இருக்குனு தோணுது. அதே மாதரி எப்பவோ ஒரு தமிழ் படம்னுல்லாம் இருந்திருந்தா இன்னும் அந்த க்ரேஸ் இருந்திருக்கும்னு தான் தோணுது.



Tuesday, November 13, 2007

இது எங்க ஏரியா உள்ள வராதே!!

இப்படி ஒரு தலைப்பை பார்த்து நான் ஏதோ ரொம்ப ஒரு நல்ல ஏரியால இருந்து ராஜாங்கம் பண்ணிக்கிட்டு வேற யாரையும் உள்ள விடலைனு நெனசீங்கன்னா அது தப்பு....

இருபத்து நாலு வருஷமா அந்த ஏரியால குப்பை கொட்டிட்டு (வாழ்ந்துட்டு) வெறுப்புல எச்சரிக்கிற ஸ்டேட்மென்ட் அது. ஆவடி-னு ஒரு இடத்தை சென்னை-ல சில பேர் கேள்விப்பட்டிருக்கலாம், பல பேருக்கு அது ஒரு டிபென்ஸ் ஏரியா-னு தெரிஞ்சிருக்கலாம். அப்படிப்பட்ட புண்ணிய பூமியில ஒரு பகுதிய பத்தி தான் சொல்றேன். ஆவடி-ல காந்தி நகர்-னு ஒரு ஏரியா இருக்குங்க, அங்க நாங்க சாதாரணமா தண்ணி-னு (drinking water தான்) சொல்லவே மாட்டோம். நல்ல தண்ணி உப்பு தண்ணி-னு பிரிச்சு தான் எல்லாத்துக்கும் சொல்ல வேண்டி இருக்கும். குடிக்கிறதுக்கு மட்டும் நல்ல தண்ணி, மத்த எல்லாத்துக்கும் உப்பு தண்ணி தான்.

உப்புன்னா உங்க வீட்டு எங்க வீட்டு உப்பு இல்லேங்க, அங்கே ஒரு உப்பளம் ஆரம்பிச்சா நல்ல வருமானம் வரும், அப்படி கடல் தண்ணி அளவுக்கு கரிக்கும். ஒரு வேளை பல வருஷத்துக்கு முன்னாடி அங்கே கடலோட extension இருந்துச்சோனு யோசிக்கிற அளவுக்கு இருக்கும். எங்க ஏரியால ஒரு வீட்டுல கிணறு தோண்டினா அல்லது போர்வெல் போட்டா மொத்த ஏரியாவும் அந்த ரிசுல்டுக்காக காத்திருக்கிறதை பார்த்தா ஏதோ ஒரு லேபர் ரூம் வெளியே ரிசுல்டுக்கு டென்ஷனா வெயிட் பண்ணற அப்பாவை விட ஜாஸ்தியா இருக்கும். இப்படியே ஆளாளுக்கு இன்னும் ஜாஸ்தி தோண்டினா நல்ல தண்ணி கிடைக்கும்னு நெனச்சு தோண்டி ஒரு நாள் இல்ல ஒரு நாள் விவேக் காமெடில வர்ற மாதிரி மெக்சிகன் ஆளு ஒருத்தன் எங்க ஏரியால கிணறு வழியா வந்துருவான்.

ஒவ்வொரு எலெக்க்ஷன்க்கும் வர்றவன் எல்லாம் வோட்டு கேக்குறதே இதை வச்சு தான். பாவம் எங்க மக்கள், இவன் செஞ்சுருவான்னு நம்பி ஏமாந்து போனது தான் மிச்சம் இது வரை நல்ல தண்ணி வந்த பாடு இல்ல. எங்க அப்பா அங்கே இருக்கிற tank factory -ல வேலை செய்யுறதால அங்கே பக்கமா வீடு இருக்கணும்னு நெனச்சு இந்த வீட்டை வாங்கினாங்க. அப்பா சிட்டியில பிறந்து வளர்ந்ததால அமைதியான, பசங்க safe -ஆ ஸ்கூல் போய்ட்டு வர்ற மாதிரியான இடம்னு ஆசைப்பட்டு வாங்கினாங்க. இந்த பிரச்சனைய தீர்க்க எங்க township -ல எவ்வளவோ சண்டை போட்டு பார்த்துட்டாங்க, ஒண்ணும் நடக்கல. இதுல கூத்து என்னன்னா இவ்ளோ போராடி எங்க பக்கத்து தெருவுல எல்லாம் குழாய் வசதி வந்து அஞ்சு வருஷம் ஆச்சு, ஆனா எங்க தெரு மட்டும் என்னவோ தெரியல பல காரணங்களால அதே நிலைமையில தான் இருக்கு.

எங்களுக்கு ஒரே ஒரு சோர்ஸ் OCF (Ordinance Clothing Factory) குவார்டர்ஸ் தான். அங்கே இருக்கிற தெரிஞ்சவங்க எங்களுக்கு தினமும் நாலு குடம் தண்ணி குடுப்பாங்க. அந்த புண்ணியத்துல கொஞ்ச வருஷங்கள் ஓடிச்சு, அப்புறம் நல்ல மனசு படைச்ச யாரோ அந்த ஏரியா மக்கள் குவார்டர்ஸ்-ல தண்ணி பிடிக்கிறது அவங்களுக்கு தொந்தரவா இருக்குன்னு பாக்டரி மாநேஜ்மேன்ட்க்கு லெட்டர் எழுதி போட்டு அந்த மாதிரி தண்ணி கொடுக்குறவங்களுக்கு தண்டனைங்கற அளவுக்கு போனதும் எங்க மக்கள் அங்கே போறத நிறுத்திட்டாங்க. அப்போல்லாம் தூங்கி எழுந்தா முதல்ல முழிக்கிறது புக்-ல அதுக்கபுறம் தண்ணி குடம்-னு இருந்தது. கொஞ்சம் வருஷத்துக்கு அப்பா பல விதத்துல try பண்ணி தண்ணி எடுத்துக்கிட்டு வருவாங்க. TVS-50 ல முன்னாடி பெரிய கேன் வச்சு, அப்பா முதல் முதலா வாங்கின சைக்கிள்-ல பின்னாடி கயிறுல 2 குடம் கட்டி தொங்க விட்டதுனு நிறைய methods முயற்சி பண்ணி இருக்காங்க.

அதுக்கபுறம் புண்ணியவானுங்க (தண்ணி லாரி தான்) எங்க ஏரியாக்கு சப்ளை பண்ண ஆரம்பிச்சாங்க. ஒரு குடம் Rs.2 க்கு. ஒரு பாரல் தண்ணி Rs.20. ஹப்பாடான்னு ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டோம். அதுக்கப்புறம் குடத்துல முழிக்க வேண்டிய சாபத்துல இருந்து விடுபட்டோம். காலைல 7 மணில இருந்து 8 மணி வரை சாரை சாரையாக எங்க மக்கள் அந்த குவார்டர்ஸ்-ல இருந்து ஏதோ நாட்டை வீழ்த்தி அந்த நாட்டு செல்வத்தை தங்கள் நாட்டுக்கு எடுத்துகிட்டு வர்ர மாதிரி ஒரு தெம்போடு எடுத்துக்கிட்டு வருவாங்க - அந்தக்காட்சி எல்லாம் இன்னும் கண்ணுல அப்படியே நிக்குது.

இங்க (USA) ல நயாகராவை முதல்ல பார்த்தப்போ இதுல கொஞ்சம் வெட்டி கொண்டு போய் எங்க ஏரியா-ல பிக்ஸ் பண்ணிடலாம் போல பொறாமையா இருந்தது. இங்க வந்த புதுசுல நான் தண்ணிய ரொம்ப சிக்கனமா உபயோகப்படுத்துவதை பார்த்து 'என்னவர்' அப்படி சிரித்தார். அப்புறம்தான் மெதுவா மாறி தண்ணிய தண்ணியா செலவு பண்ண ஆரம்பிச்சேன். இப்பவும் யோசிச்சு பார்த்தா தப்பு பண்றோமோன்னு சின்னதா ஒரு உறுத்தல் இருக்கு. இங்க இருந்துட்டு மறுபடியும் சென்னை போனா எப்படி தண்ணி பிரச்சனைய சந்திக்க போறோமோ ஆண்டவனுக்கு தான் வெளிச்சம் !!!

Thursday, November 1, 2007

அலற வைத்த அரிதாரம்

கல்யாணம், வாழ்கையில நடக்கிற ஒரு பெரிய மறக்க முடியாத விசேஷம். அது எல்லாருக்கும் எப்பவும் சந்தோஷமான ஒரு நினைவுகளை கொடுத்தாலும் சில விஷயங்கள் எரிச்சலை கொடுக்கும் ("பல விஷயங்களாச்சே...நீங்க சில விஷயம்னு சொல்றீங்க?!!" --நீங்க கேக்கறது எனக்கு கேக்குதுங்க). உதாரணத்துக்கு என் அனுபவத்தில் என்னவென்றால் "மேக்-அப்". எனக்கும் இதுக்கும் ரொம்ப தூரம். இந்த மேக்-அப் எல்லாம் நான் மருந்துக்காக கூட என் கல்யாணம் வரை போட்டதில்லை. அதில் 'அ' னாவும் தெரியாது 'ஆ' வன்னாவும் தெரியாது. மேக்கப் போட்ட சிலரை பார்த்து அதை ட்ரை பண்ணலாம்னு கூட ஆசை இல்லாம போச்சு. இந்த வேஷம் கட்டுறதெல்லாம் வேண்டாமேன்னு நெனச்சேன், ஆனா நம்ம மக்கள் விடுவாங்களா??.எல்லாரும் ஒரே வம்பு - வீடியோக்கு மேக்கப்-லாம் போட்டாதான் நல்லா இருக்கும்னு (தங்கம் வச்சு தேய்ச்சாலும் எருமை நிறம் மாறாதுங்கறது அவங்களுக்கு தெரியாது போல !! :-P என்னத்த சொல்ல, என்னையும் ஒரு வழி பண்ணாங்க.


என்னவர் கண்ணுக்கு நான் அழகா தெரிஞ்சதால தானே "ஓகே" சொன்னார், அப்புறம் மத்தவங்க கண்ணுக்கு நான் எப்படி தெரிஞ்சா எனக்கென்ன?.அதுலயும் என்னை மாதிரி சின்ஸியர் சிகாமணியா கல்யாணத்துக்கு 3 நாள் முன்னாடி வரை வேலைக்கு போன பொண்ணை பத்தி கேக்கவே வேண்டாம். வீடு ஆவடியில, வேலை செய்யறது சோளிங்கநல்லூர்ல. ஆபீஸ் பஸ்ல காலைல 7 மணிக்கு ஏறி உட்கார்ந்தா அந்து அவலாகி நொந்து நூடுல்ஸ் ஆகி 9.30-க்கு சுட சுட கொண்டு போய் இறக்குமதி பண்ணுவாங்க. ஏற்கனவே நாம அன்னபறவை கலர், அதுல இப்படி எல்லாம் சின்சியரா ஆபீஸ்க்கு போய்.... பார்த்தாலே கொஞ்சம் கேவலமாதான் இருந்தேன், அதனாலே மத்தவங்க பேச்சை கேக்க வேண்டியதா போச்சு.


கடைசி நேரம் வரை ஆபீஸ் போனதால அழகு கலை நிபுணரை எல்லாம் தேடி விசாரிச்சு நல்ல ஒருத்தரை எல்லாம் கண்டுபிடிக்க நேரம் இல்ல. கண்ணை மூடி தொறக்குறதுக்குள்ள என்னவர் US-ல இருந்து கல்யாணத்துக்காக இந்தியா வந்தாச்சு. அடுத்த ரெண்டாவது நாள் நிச்சயம், அடுத்த நாலாவது நாள் கல்யாணம். சரி நிச்சயத்துக்கு Guinea pig- கா மாறி அந்த அழகு கலை நிபுணருக்கு முகத்தை கொடுத்தேன். எல்லாம் முடிச்சு கண்ணாடியில பார்த்து "ஆஹ்ஹ்ஹ்" னு அலறாதது தான் மிச்சம் . நான் நானாகவே தெரியல. அழகு கலை நிபுணரின் கை வண்ணம் தெரிந்தது என் முகத்தில். என் கவலை எல்லாம் என் புகுந்த வீட்டுக்காரர்களை எண்ணி தான்...பாவம் அவங்க. :-(


அதுக்கப்புறம் இனி இந்த மாதிரி சோதனை எல்லாம் வேண்டாம்னு முடிவு பண்ணேன். 4வது நாள் திருநெல்வேலி யில் கல்யாணம். அங்கே என் மாமியார் வீட்டில் ஒரு அழகு கலை நிபுணரை பிக்ஸ் பண்ணி இருந்தாங்க. திருநெல்வேலி AKN நம்ம சென்னை AKN அளவுக்கு மோசம் இல்ல, நல்ல தெளிவா பண்ணி இருந்தாங்க. நானும் சந்தோஷப்பட்டேன். ஆனால் சந்தோஷம் ரொம்ப நேரம் நிலைக்கல. தாலி கட்டி முடிச்சி, தாலி சரடை போட என்னவர் முயற்சித்த போது, தலையில வட்டமா வச்ச பூச்சரம் தனியா கழண்டு காது பக்கத்துல மீன்காரி கொண்டை மாதிரி நின்னுடுச்சு, அதை நம்ம கூட இருக்கும் மக்கள் சரி பண்ணுவாங்கனு நெனச்சா ...சதிகாரர்கள் அதுக்கு மெருகூட்டிவிட்டார்கள். என் அக்கா என் நெத்தி பொட்டு சின்னதாக இருப்பதாக சொல்லி மீன்காரி கொண்டைக்கு மேட்சிங்கா ஒரு பெரிய மெகா சைஸ் பொட்டை கொண்டு வந்து வச்சிட்டாங்க. எனக்கு அந்த நேரத்துல எது எப்படி இருக்குனே தெரியல. என்னென்ன சொன்னாங்களோ எல்லாம் நல்ல புள்ளை மாதிரி அப்பாவியா கேட்டு செய்தேன். :-(


ஒண்ணு மட்டும் பார்த்திருக்கேங்க, கல்யாணத்துல கலந்துகிறவங்க தான் பொண்ணை விட ரொம்ப மேக்கப்-ல கவனமா இருந்து அப்பப்போ சரி செய்துகிட்டே இருப்பாங்க. அந்த பொண்ணை பத்தி யாரும் நெனைக்கிறதே இல்லை. நெனைக்கலைனாலும் பரவாயில்லை அவங்க அவங்க கை வண்ணத்தை காமிக்காம இருந்தா போதாதா?


ஹ்ம்ம்...என்ன பண்ணறது இப்படியாக கல்யாணம் நல்லபடியா நடந்து சென்னை-ல அடுத்த 10 நாள்-ல ரிசெப்ஷன்-ம் நல்லபடியா நடந்தது. என் நேரம் மூணு தடவை இதனால வேஷம் கட்ட வேண்டியதா போச்சு. இப்போ எல்லாம் இங்க யு.எஸ்-ல இருந்துகிட்டு அம்மா அப்பா அக்கா-வை எல்லாம் பார்க்கணும்னு ஆசையா இருக்கும் போது எங்க கல்யாண வீடியோ-வை பார்க்கலாம்னு சி.டி போட்டா-என் முகத்தை பார்த்து மூட் அவுட் ஆகுறது தான் மிச்சம் :-(


ஆனா ஒண்ணுங்க....இனி வீட்டுல ஒரு கல்யாணம் நடந்தா அந்த கல்யாண பொண்ணுக்கு எனக்கு ஏற்பட்ட அனுபவம் ஏற்படாம பார்த்துக்குவேன். என் நாத்தனார் தான் அந்த பாக்கியசாலி-னு நினைக்கிறேன். :-)

Number of online users in last 3 minutes
westgate resorts


Total User Hits
Free Hit Counter