Tuesday, November 27, 2007

சின்னஞ்சிறு வயதில் !!

நல்ல தூக்கம்...அப்பா பேசும் சத்தம் (பாவம்..அப்பா மெதுவா பேசினாலும் 4 வீட்டுக்கு கேக்கும் - அப்படி ஒரு குரல்) கேட்டு தூக்கம் லேசா கலைய மணி 6 என்று உணர்ந்து அடுத்த நிமிஷம் ஆஹா இன்னைக்கு சண்டே என்று ஞாபகம் வர பக்கத்தில் அக்காவும் தூங்கி கொண்டு இருப்பதை பார்த்து ஹப்பா இன்னும் நமக்கு கொஞ்சம் கிரேஸ் டைம் இருக்கு-னு நம்பி கண்ணை மூட அம்மா வந்து இன்னும் என்ன தூக்கம்-னு எழுப்பி விட்ருவாங்க :-((. சரி நமக்கு அப்போதைய ஆறுதல் 2KM தூரம் இன்னைக்கு ஸ்கூல்க்கு நடக்க வேண்டியதில்லை பிளஸ் இன்னைக்கு சுதந்திரமா டிவி பார்க்கலாம்னு ஒரு தெம்பு வரும். எழுந்து தலை குளியல் போது அம்மாவிடம் 4 அடியோடு அன்றைய நாளை ஆரம்பிச்சு 7 மணிக்கு TV முன்னாடி வந்து ஆஜர் ஆவோம். அங்கே கிச்சன்ல டிபன் நல்லா சூடா இட்லி வடகறி/சாம்பாரோட வாசனையா இருக்கும் - அதுவே சண்டே ஃபீலிங்கை வரவழைக்கும்.

தூர்தர்ஷன்ல அப்போ முதல்ல VIBGYOR கலர்ஸ்ல நிறைய காலம்மா (column) வரும்- வீட்டுல அப்போ black & white TV தான் - நிறைய சாம்பல் நிற கோடுகளா தெரியும். மெதுவா அதுல எப்போ அந்த DD logo வரும்-னு அதையே உற்று பார்த்துக்கிட்டு இருப்போம் - அதை நாங்க செல்லமா "நாய் வாலு"-னு சொல்லுவோம் - அது அப்படியே ஒரு மியூசிக்கோட சுருண்டு வந்து நிக்கும். அம்மா தட்டுல டிபன் கொண்டு வந்து கொடுப்பாங்க .அப்போ ஆரம்பிச்சு மாலை ஸ்போர்ட்ஸ் ப்ரோக்ராம் வர்ற வரை TV ஆப் பண்ணாம பார்போம்- ஸ்போர்ட்ஸ் ப்ரோக்ராமுக்கு சண்டை போட வீட்டுல பையன் இல்ல, அதுனால அப்போ தான் TV க்கு ரெஸ்ட். TV அடுப்பு கணக்கா கொதிக்கும். மாலை போடும் தமிழ் படம் பார்க்கணும்னா ஒரு மணி நேரத்துக்கு TV க்கு ரெஸ்ட் வேணும் இல்லனா TV கோடு கோடா ஓட ஆரம்பிச்சிடும் (horizontal lines moving upwards). அந்த மாதிரி வரும் போதெல்லாம் TV தலைல ஒண்ணு போடுவாங்க - சரி ஆகும். இல்லன்னா நானும் அப்பாவும் மாடிக்கு பொய் TV ஆண்டெனாவை திருப்புவோம், அம்மா TV பார்த்து பார்த்து அப்டேட் கொடுப்பாங்க.

அப்போலாம் DD ல ஒரு ரீல்-ல சமூக அக்கறையுள்ள குறும்படங்கள் வரும். உதாரணத்துக்கு ஒரு வதந்தி எப்படி பரவுதுனு, அப்புறம் சுற்றுபுறமாசு பற்றி ஒன்னு - அது எனக்கு ரொம்ப பிடிக்கும். சில நேரங்களில்...சாரி பல நேரங்களில் "தடங்கலுக்கு வருந்துகிறோம்"-னு ஒரு அம்மா சப்பாத்தி கட்டை கொண்டு கணவரை அடிக்கிற மாதரி சிலைடு வரும்- சில நாள்ல சிலைடு வைக்கிறவரு விரல் கூட தெரியும். ரொம்ப நேரத்துக்கு காத்திருப்போம், சில நேரத்தில் அதை நாங்க எல்லாரும் சேர்ந்து ஒரு எழுத்து விட்டு விட்டு சொல்லிகிட்டே இருப்போம். அந்த சிலைடு போயிடும்னு நம்புவோம். எப்படி சொல்லுவோம் என்றால் "டங்களுக்கு வருந்துகிறோம், அங்களுக்கு வருந்துகிறோம், களுக்கு வருந்துகிறோம்" இப்படி :-)))

அந்த "காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு" என் தங்கையோட favorite- அவ அப்போ ரொம்ப சின்ன பொண்ணு, ஆனால் அப்படியே அந்த அறிவிப்பை வேற மாதிரி கிண்டல் பண்ணி இமிடேட் பண்ணுவா. அப்போல்லாம் நாங்க பயங்கர மாக்கானுங்களா இருந்திருக்கோம். உதாரணத்துக்கு நம்ம தமிழ் செய்தி வாசிப்பவரையும் டெல்லி இங்கிலீஷ் நியுஸ் வாசிக்கிறவங்களை பற்றி கம்பேர் பண்ணுவோம். நம்ம ஆளுங்க பார்த்தே படிக்கிறாங்க, டெல்லி ஆளுங்க எப்படி பார்க்காம மனப்பாடம் பண்ணி படிக்கிறாங்க-னு திட்டுவோம். அப்புறம் ரொம்ப நாள் கழிச்சு தான் "tele promptor" பத்தி எல்லாம் தெரிய வந்துச்சு :-((

அப்போ வர்ற நிகழ்ச்சி எல்லாம் வித்தியாசமா இருக்கும், இன்னும் அப்படியே ஞாபகத்துல இருக்கு. நன்னனோட "காண்போம் கற்போம்", வயலும் வாழ்வும், மென் அண்ட் மேட்டேர்ஸ், மனைமாட்சி, கண்மணிப்பூங்கா, தேன் துளி, Secrets of the sea, Space city sigma, Fairy Tales, Potli baba ki, எதிரொலி - யு.ம் கண்ணன் தான் நிறைய வருவார். இரவு "ஓவர் டு ரீஜினல் சர்வீஸ்" னு போடுற வரை சண்டே-ல TV பார்ப்போம். அது போட்டதும் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும் மறுநாள் ஸ்கூல் போகணுமே-னு. :-(

அப்போல்லாம் ஞாயிற்று கிழமை மத்தியானம் 1.30 மணிக்கு hearing impaired news போடுவாங்க. அதை பார்த்து செய்கை பாஷைல கொஞ்ச நேரத்துக்கு பேசிக்குவோம். அப்புறம் Regional Film வரும் சப்-டைட்டில் பார்த்து பார்த்து கதைய புரிஞ்சிக்குவோம். என்னைக்காவது ஒரு தமிழ் படம் வரும்- அதை காலையிலே செய்திதாள்ல பார்த்துடோம்னா பக்கத்து வீட்டுக்கெல்லாம் சொல்லி ஒரே பரபரப்பை உருவாக்குவோம். அன்னைக்கு வேகமா சாப்பிட்டு அந்த படத்தை மிஸ் பண்ணாம பார்க்க உட்கார்ந்துடுவோம். சண்டேல இன்னொரு கொடுமை என்னன்னா எங்க வீட்டுல இஷ்டத்துக்கு non veg இருக்கும், அப்பா அதை சூடா சாப்பிட சொல்லுவாங்க, சூடா காரமா சாப்பிடுவோம் - கண்ணுல மூக்குலலாம் தண்ணி கொட்டும், ஆறிட கூடாதுன்னு பேனையும் அப்பா ஆஃப் பண்ணிடுவாங்க. அந்த காரத்துக்கு குடிக்க வெந்நீர் வேற - என்ன கொடுமை சார் இது :-(((

அப்போல்லாம் திங்கள் கிழமை சித்ரமாலா வரும். அந்த ஒரு தமிழ் பாட்டுக்கு தவம் கெடப்போம், அப்புறம் செவ்வாய் நாடகம்- அது அப்போ ரொம்ப பேமஸ். ஒரே sofa தான் எல்லா நாடகத்திலும் வரும். அதுக்கு வெல்வெட் எஃபெக்ட் கொடுக்குறதுக்காக shade பண்ணி இருப்பாங்க. பயங்கர பக்கித்தனமா இருக்கும், ஆளுங்க நடந்தா டும் டும்னு சத்தம் வேற வரும். அதுல வர நடிகரெல்லாம் பயங்கர artificial லா நடிப்பாங்க . அப்போ famous ஹீரோ ஹீரோயீன் யாருன்னா ராஜேந்திரன், ஸ்ரீலேகா, சுமங்கலி, கண்ணன் இவுங்கெல்லாம் தான். :-))) அப்புறம் புதன் சித்ரஹார் வரும், வியாழன் ஒண்ணும் பெருசா இருக்காது, வெள்ளி ஒலியும் ஒளியும், சனி ஹிந்தி படம் அப்புறம் முன்னோட்டம், ஞாயிறு தமிழ் படம்.

அப்புறம் பல வருஷத்துக்கு அப்புறம் நிறைய ஹிந்தி சீரியல் தமிழ்ல டப் பண்ணி வந்துச்சு, அதுல முதல் இடம் நம்ம ஜுனூன். ஜுனூன் தமிழ்னே ஒன்னு இருக்கு :-))) தலை கீழா பேசினா அதான் ஜுனூன் தமிழ். உதாரணத்துக்கு "நான் நல்லா இருக்கேன்" -ங்கரத ஜுனூன் தமிழ் ல "இருக்கேன் நான் நல்லா.." னு சொல்லணும். :-)) அதுல இன்னும் சில சீரியல் என்னன்னா...ஸ்வாபிமான், கநூன், ஜமானா பதல் கையா, து து மெய்ன் மெய்ன், நுக்கடு, நையா நுக்கடு. நுக்கடு எனக்கு பிடிக்கும்ங்க :-). இப்படி நிறைய அந்த நாள் ஞாபகம் ...ஹ்ம்ம் ..அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சுனு சொல்றது ரொம்ப சரி. கேபிள் TV எல்லாம் வந்து எப்பவும் நிகழ்ச்சி இருப்பதால் தான் நமக்கு அந்த க்ரேஸ் போய் இருக்குனு தோணுது. அதே மாதரி எப்பவோ ஒரு தமிழ் படம்னுல்லாம் இருந்திருந்தா இன்னும் அந்த க்ரேஸ் இருந்திருக்கும்னு தான் தோணுது.



3 comments:

Mangai said...

நல்லா ஞாபகம் வைத்து எழுதி இருக்கிறீர்கள். எனக்கும் பள்ளி காலத்து தொலைக்காட்சி பார்த்த அனுபவங்களை நினவில் கொண்டு வந்தது.
ஆனால் நிறைய ஆங்கிலக் கலப்பு.

word verification எடுத்திடுங்க.

மதுமதி முருகேஷ் said...
This comment has been removed by the author.
மதுமதி முருகேஷ் said...

மங்கை, உங்க பின்னூட்டம் எனக்கு ஒரு கிரியா ஊக்கியாக உள்ளது. கூடியமட்டும் ஆங்கில கலப்பை தவிர்க்க முயற்சிக்கிறேன்.

word verification என்றால் என்ன? அப்படி எதுவும் நான் போடவில்லையே?!..

Number of online users in last 3 minutes
westgate resorts


Total User Hits
Free Hit Counter