Thursday, November 1, 2007

அலற வைத்த அரிதாரம்

கல்யாணம், வாழ்கையில நடக்கிற ஒரு பெரிய மறக்க முடியாத விசேஷம். அது எல்லாருக்கும் எப்பவும் சந்தோஷமான ஒரு நினைவுகளை கொடுத்தாலும் சில விஷயங்கள் எரிச்சலை கொடுக்கும் ("பல விஷயங்களாச்சே...நீங்க சில விஷயம்னு சொல்றீங்க?!!" --நீங்க கேக்கறது எனக்கு கேக்குதுங்க). உதாரணத்துக்கு என் அனுபவத்தில் என்னவென்றால் "மேக்-அப்". எனக்கும் இதுக்கும் ரொம்ப தூரம். இந்த மேக்-அப் எல்லாம் நான் மருந்துக்காக கூட என் கல்யாணம் வரை போட்டதில்லை. அதில் 'அ' னாவும் தெரியாது 'ஆ' வன்னாவும் தெரியாது. மேக்கப் போட்ட சிலரை பார்த்து அதை ட்ரை பண்ணலாம்னு கூட ஆசை இல்லாம போச்சு. இந்த வேஷம் கட்டுறதெல்லாம் வேண்டாமேன்னு நெனச்சேன், ஆனா நம்ம மக்கள் விடுவாங்களா??.எல்லாரும் ஒரே வம்பு - வீடியோக்கு மேக்கப்-லாம் போட்டாதான் நல்லா இருக்கும்னு (தங்கம் வச்சு தேய்ச்சாலும் எருமை நிறம் மாறாதுங்கறது அவங்களுக்கு தெரியாது போல !! :-P என்னத்த சொல்ல, என்னையும் ஒரு வழி பண்ணாங்க.


என்னவர் கண்ணுக்கு நான் அழகா தெரிஞ்சதால தானே "ஓகே" சொன்னார், அப்புறம் மத்தவங்க கண்ணுக்கு நான் எப்படி தெரிஞ்சா எனக்கென்ன?.அதுலயும் என்னை மாதிரி சின்ஸியர் சிகாமணியா கல்யாணத்துக்கு 3 நாள் முன்னாடி வரை வேலைக்கு போன பொண்ணை பத்தி கேக்கவே வேண்டாம். வீடு ஆவடியில, வேலை செய்யறது சோளிங்கநல்லூர்ல. ஆபீஸ் பஸ்ல காலைல 7 மணிக்கு ஏறி உட்கார்ந்தா அந்து அவலாகி நொந்து நூடுல்ஸ் ஆகி 9.30-க்கு சுட சுட கொண்டு போய் இறக்குமதி பண்ணுவாங்க. ஏற்கனவே நாம அன்னபறவை கலர், அதுல இப்படி எல்லாம் சின்சியரா ஆபீஸ்க்கு போய்.... பார்த்தாலே கொஞ்சம் கேவலமாதான் இருந்தேன், அதனாலே மத்தவங்க பேச்சை கேக்க வேண்டியதா போச்சு.


கடைசி நேரம் வரை ஆபீஸ் போனதால அழகு கலை நிபுணரை எல்லாம் தேடி விசாரிச்சு நல்ல ஒருத்தரை எல்லாம் கண்டுபிடிக்க நேரம் இல்ல. கண்ணை மூடி தொறக்குறதுக்குள்ள என்னவர் US-ல இருந்து கல்யாணத்துக்காக இந்தியா வந்தாச்சு. அடுத்த ரெண்டாவது நாள் நிச்சயம், அடுத்த நாலாவது நாள் கல்யாணம். சரி நிச்சயத்துக்கு Guinea pig- கா மாறி அந்த அழகு கலை நிபுணருக்கு முகத்தை கொடுத்தேன். எல்லாம் முடிச்சு கண்ணாடியில பார்த்து "ஆஹ்ஹ்ஹ்" னு அலறாதது தான் மிச்சம் . நான் நானாகவே தெரியல. அழகு கலை நிபுணரின் கை வண்ணம் தெரிந்தது என் முகத்தில். என் கவலை எல்லாம் என் புகுந்த வீட்டுக்காரர்களை எண்ணி தான்...பாவம் அவங்க. :-(


அதுக்கப்புறம் இனி இந்த மாதிரி சோதனை எல்லாம் வேண்டாம்னு முடிவு பண்ணேன். 4வது நாள் திருநெல்வேலி யில் கல்யாணம். அங்கே என் மாமியார் வீட்டில் ஒரு அழகு கலை நிபுணரை பிக்ஸ் பண்ணி இருந்தாங்க. திருநெல்வேலி AKN நம்ம சென்னை AKN அளவுக்கு மோசம் இல்ல, நல்ல தெளிவா பண்ணி இருந்தாங்க. நானும் சந்தோஷப்பட்டேன். ஆனால் சந்தோஷம் ரொம்ப நேரம் நிலைக்கல. தாலி கட்டி முடிச்சி, தாலி சரடை போட என்னவர் முயற்சித்த போது, தலையில வட்டமா வச்ச பூச்சரம் தனியா கழண்டு காது பக்கத்துல மீன்காரி கொண்டை மாதிரி நின்னுடுச்சு, அதை நம்ம கூட இருக்கும் மக்கள் சரி பண்ணுவாங்கனு நெனச்சா ...சதிகாரர்கள் அதுக்கு மெருகூட்டிவிட்டார்கள். என் அக்கா என் நெத்தி பொட்டு சின்னதாக இருப்பதாக சொல்லி மீன்காரி கொண்டைக்கு மேட்சிங்கா ஒரு பெரிய மெகா சைஸ் பொட்டை கொண்டு வந்து வச்சிட்டாங்க. எனக்கு அந்த நேரத்துல எது எப்படி இருக்குனே தெரியல. என்னென்ன சொன்னாங்களோ எல்லாம் நல்ல புள்ளை மாதிரி அப்பாவியா கேட்டு செய்தேன். :-(


ஒண்ணு மட்டும் பார்த்திருக்கேங்க, கல்யாணத்துல கலந்துகிறவங்க தான் பொண்ணை விட ரொம்ப மேக்கப்-ல கவனமா இருந்து அப்பப்போ சரி செய்துகிட்டே இருப்பாங்க. அந்த பொண்ணை பத்தி யாரும் நெனைக்கிறதே இல்லை. நெனைக்கலைனாலும் பரவாயில்லை அவங்க அவங்க கை வண்ணத்தை காமிக்காம இருந்தா போதாதா?


ஹ்ம்ம்...என்ன பண்ணறது இப்படியாக கல்யாணம் நல்லபடியா நடந்து சென்னை-ல அடுத்த 10 நாள்-ல ரிசெப்ஷன்-ம் நல்லபடியா நடந்தது. என் நேரம் மூணு தடவை இதனால வேஷம் கட்ட வேண்டியதா போச்சு. இப்போ எல்லாம் இங்க யு.எஸ்-ல இருந்துகிட்டு அம்மா அப்பா அக்கா-வை எல்லாம் பார்க்கணும்னு ஆசையா இருக்கும் போது எங்க கல்யாண வீடியோ-வை பார்க்கலாம்னு சி.டி போட்டா-என் முகத்தை பார்த்து மூட் அவுட் ஆகுறது தான் மிச்சம் :-(


ஆனா ஒண்ணுங்க....இனி வீட்டுல ஒரு கல்யாணம் நடந்தா அந்த கல்யாண பொண்ணுக்கு எனக்கு ஏற்பட்ட அனுபவம் ஏற்படாம பார்த்துக்குவேன். என் நாத்தனார் தான் அந்த பாக்கியசாலி-னு நினைக்கிறேன். :-)

8 comments:

Mangai said...

ரொம்ப ரசிச்சேன் நான் இதை. இந்த அனுபவம் நிறைய பேருக்கு இருந்திருக்கும். எனக்கும் தான்.

மதுமதி முருகேஷ் said...

மங்கை, உங்க பின்னூட்டத்தி்ற்க்கு மிக்க நன்றி.

Anonymous said...

You write so well. I love the way you write. I laughed so hard.Keep posting.

Radha

பாச மலர் / Paasa Malar said...

ஆஹா...நீங்க்ளுமா..என்ன செய்வது..மணப்பெண்ணின் முகம் அவர்களுக்கு ஆடுகளமாகிவிடுகிறது..

மதுமதி முருகேஷ் said...

அன்புள்ள பாசமலர் நீங்களும் என்னை மாதிரி சிக்கி இருபீங்கன்னு எதிர்பார்க்கவே இல்லை! "same blood" ;-)

மதுமதி முருகேஷ் said...

அன்புள்ள தோழி ராதா மிக்க நன்றி. மேலும் பல நல்ல பதிவுகளை எழுத முயற்சிக்கிறேன்.

Unknown said...

உண்மை தான் சகோதரி ..!
இயல்பாய் இருக்கும் உங்கள் எழுத்து அருமை...!

-அருண்

Dr.Naganathan Vetrivel said...

eno teriyalla neenga remba suppara ezhutireenga

Number of online users in last 3 minutes
westgate resorts


Total User Hits
Free Hit Counter